தாயகத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் சிறீலங்காப் பேரினவாதத்தால் சூறையாடப்படுவதைக் கண்டித்து அமைதி ஆர்ப்பாட்டப் போராட்டத்தை மேற்கொண்ட தாயக மக்களுக்கு டென்மார்க் தமிழர் பேரவை சார்பாக எமது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்துடன், திட்டமிட்ட பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எழும் கண்டனக் குரல்களை நசுக்க, நேரடியாகவும் மறைமுகமாகவும் வன்முறையைத் தூண்டிவிட்ட சிறீலங்காப் படைகளின் அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கடந்த 20 வருடங்களாக தமது சொந்தக் காணிகளில் மீழக்குடியேறமுடியாத நிலையில் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் எமது மக்கள் சிறீலங்கா அரச படைகளிடமிருந்து உயிராபத்தையும் பொருட்படுத்தாது, சிறலங்கா காவல்துறையினரின் தடைகளையும் மீறி அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடாத்தியுள்ளார்கள்.
சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு தமிழரின் பாரம்பரிய நிலங்களைச் சூறையாடி, தமிழர்களது பாரம்பரிய வரலாறு, கலாச்சார அடையாளங்களை படிப்படியாக அழித்து, அங்கே புத்த விகாரைகளை அமைத்தும் சிங்களக்குடியேற்றங்களை நிறுவியும் பாரிய இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை நடவடிக்கையை என்றுமில்லாதவாறு மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
இதை எதிர்க்கின்ற வகையில் தாயகத்தில் எமது மக்களால் மேற்கொள்ளப்படும் நீதியான, அகிம்சைவழியிலான கண்டன ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்காக சிறீலங்காப் படைத்தரப்பு மிக நுட்பமாக காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மக்கள் மீது ஏவி, அவர்களது ஜனநாயக அமைதிப் போராட்டங்களை அடக்கிவருகிறது.
அந்தவகையில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை செய்துவிட்டு திரும்பிய மக்கள் மீது தாக்குதல் செய்து, அவர்கள் மீது கழிவு ஓயில் ஊற்றுவதன் மூலம் இனிமேலும் மக்களின் இவ்வாறான அகிம்சைவழியிலான ஜனாநாயகக் குரல்களை ஒடுக்க முற்படும் சிங்கள அரசின் செயலை நாம் மேலும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வடக்கில் எட்டு தமிழருக்கு ஒரு சிங்களப்படை விகிதம் நிலைகொண்டிருக்கும் படைக்குவிப்புக்கு மத்தியிலும், அங்கே அமைதியான ஆர்ப்பாட்டத்தை இடையூறுசெய்து தடுப்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களைக்காட்டிலும் பெருந்தொகையாகக் குவிக்கப்பட்ட காவல்துறையினர் மத்தியிலும் அந்த அப்பாவி மக்கள் தாக்கப்பட்ட சம்பவமானது சிறீலங்கா அரசின் நேரடி அடக்குமுறை அடாவடித்தனத்தை வெட்டை வெளிச்சமாகக் காட்டியுள்ளது.
நில அபகரிப்புக்கு எதிரான தாயக மக்களின் இந்த அகிம்சை விழியிலான கண்டனப் போராட்ட நியாயங்களையும் அரச படைகளின் காட்டுமிராண்டித்தனமான அசம்பாவிதத்தையும் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற மக்களாகிய நாம் அந்தந்த நாடுகளின் அரசுகளின் கவனத்துக்குக் கொண்டுவருவதோடு, அனைத்துலக மனிதவுரிமை அமைப்புக்களுக்கும் தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் எமது மக்களுக்கான நீதிவேண்டிய போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம்.
அத்துடன், ஜனநாயக உரிமையுடன் அமைதிவழியிலான இவ்வாறான போராட்டங்களை தாயகத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், அந்த போராட்ட நியாயங்களை புலம்பெயர் தேசங்களில் புலம்பெயர் மக்களாகிய நாம் அனைத்துலக அரசுகளினதும் சம்மந்தப்பட்ட மனிதவுரிமை அமைப்புக்களினதும் கவனத்துக்கு கொண்டுந்து நாமும் புலத்தில் தாயக மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்துடன், இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை முன்நின்று வழிநடத்திய அரசியல் கட்சிகளுக்கும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்களுக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
டென்மார்க் தமிழர் பேரவை.








