ஆலயத்தினுள் பாதணியுடன் சென்ற படையினனின் செயலைக் கண்டித்த ஆலய அர்ச்சகர் படையினரால் கண்முடித்தனமாகத் தாக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வடமராட்சி எள்ளங்குளம் ஆதி பராசக்தி கோவிலில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
படையினரினால் கையகப்படுத்தப்பட்ட குறித்த ஆலயம், படையினர் தமது விளையாட்டு மைதானமாக மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ தினம் ஆலய அர்ச்சகர் பூசையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை படையினரால் அடிக்கப்பட்ட பந்து ஆலயத்திற்குள் வந்து வீழ்ந்துள்ளது. இதனை எடுப்பதற்காக ஓடிவந்த படை சிப்பாய் பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளார்.
ஆலய விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட இராணுவப் சிப்பாயை அர்ச்சகர் கண்டித்துள்ளார். இதன் எதிரொலியாக சில நிமிடங்களில் அங்கு வந்த அப்பகுதிக்குப் பொறுப்பான படை அதிகாரி மற்றும் படையினர் மிரட்டியதுடன் அர்ச்சகரை தாக்கியுள்ளனர்.
இதனால் உடம்பின் பல இடங்களிலும் காயமடைந்த அர்ச்சகர் அப்பகுதி மக்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.








